states

img

'தி கேரளா ஸ்டோரி' விவகாரம்: காஷ்மீர் மருத்துவ மாணவர்கள் மோதல்

காஷ்மீர் அரசு மருத்துவக் கல்லூரியில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்பட விவகாரத்தில், மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது தொடர்பாக 10 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கடும் சர்ச்சைகளுக்கு இடையே கடந்த மே 5-ஆம் தேதி வெளியானது. மக்களிடையே பிரிவினையை தூண்டும் விதமாக படம் அமைந்துள்ளதாக பலதரப்பட்ட மக்களிடையே கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. ஆனால், பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் படத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் 'லிங்க்' ஒன்றை காஷ்மீரின் அரசு மருத்துவக்கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவர், மாணவர்களுக்கான வாட்ஸ்அப் குரூப்பில் பகிர்ந்து, "இப்படத்தை பார்த்து அனைவரும் விழித்துக்கொள்ளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

அப்போது, அந்த வாட்ஸ்அப் குரூப்பில் இருந்த மற்றொரு மாணவர், "வெறுப்புணர்வு பரப்புவதை நிறுத்துங்கள், உங்களுக்கு அப்படி செய்ய வேண்டும் என்றால், வேறு வாட்ஸ்அப் குரூப்பில் செய்யுங்கள்" என்று பதிலளித்துள்ளார். 
இதைத் தொடர்ந்து விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் நேற்று முன்தினம் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது வெளிநபர்கள் சிலரும் உள்ளே புகுந்து மாணவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த மோதலில், 5 மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக கல்லூரிக்கு விரைந்தனர். கல்லூரி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் தற்போது 10 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள், கல்லூரி விடுதியிலிருந்தும் 2 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

;